Followers

Sunday, 16 June 2019

பதஞ்சலி முனிவர்




      பதஞ்சலிஇன்று உலகெங்கும் பிரபலமாகக் பின்பற்றப் படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் பதஞ்சலி ஆவார். இவர் சித்தர்களுள் ஒருவராகக் கருதப் படுகின்றார். இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இவர் வாழ்ந்தது தமிழகத்திலுள்ள சிதம்பரம் ஆகும். பதஞ்சலி யோகத்தின் இந்த சூத்திரமளவுக்கு புகழ்பெற்ற சூத்திரங்கள் நமது மரபில் குறைவு. தேவைப்பட்ட இடத்திலும் தேவைப்படாத இடத்திலும் சகட்டுமேனிக்கு இந்த சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது . இவ்வாறு பலவகையான அறிஞர்களால் பலவிதமாக பயன்படுத்தப்படுவதனால் மிதமிஞ்சி விளக்கப்பட்டு ஒரு கட்டத்தில் இச்சூத்திரமே ஓர் அடர்ந்த புதர் போல ஆகிவிட்டிருக்கிறது . ஆகவே நாம் இதன் சொற்களை மட்டுமே கணக்கில் கொண்டு பேசுவது நல்லது என்பது என் எண்ணம். ஓர் உவமை .பிரபஞ்சத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது எல்லா திசையிலும் பரவி விரிந்து சென்றபடியே இருப்பதாக கண்டார்கள். கற்று நிரம்பும் பலூன் ஒன்று விரிவடைகையில் அதில் உள்ள புள்ளிகள் விலகி செல்வது போல பால்வழிகள் விலகி செல்கின்றன என்றார்கள். இது ·ப்ரிஜோ காப்ரா தன் ‘தாவோ ஆ·ப் ·பிசிக்ஸி’ல் அளிக்கும் உவமை. இவ்வாறு பால்வழிகள் விலகி செல்லும் வேகத்தை கணக்கிட்டார்கள் . அதை எதிர் திசைக்கு போட்டு பார்த்து இப்பிரபஞ்சம் எப்படி ஒரே பொருளாக ஒரு காலத்தில் இருந்திருக்க கூடும் என்று கண்டடைந்தார்கள். எப்போது பெருவெடிப்பு ஒன்று நிகழ்ந்து அதன் துகள்கள் நட்சத்திர மண்டலங்களாக மாறி விலகிச் செல்ல ஆரம்பித்திருக்கும் என்று கண்டார்கள். இதை நாம் மனதுக்கும் ஓர் உதாரணமாக போட்டுப் பார்ப்போம்.
                                        நாம் நம் மனதை அறியும்போது அது ஓயாமல் இயங்கியபடியே இருப்பதைக் காண்கிறோம். நாம் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் அது செயல்பட்டபடியே இருக்கிறது அல்லவா? நாம் மனம் என்று சொல்வது எதை? மனதின் பிம்பங்களின் இந்த ஓட்டத்தைத்தான். ஆனால் மனம் என்பது அதுதானா? எந்தக் கருவி அந்த படங்களை தயாரிக்கிறது? எது அவற்றை ஒளிபரப்புகிறது ? எதன் மீது அவை ஓடுகின்றன? அதை பார்ப்பது எந்த விழி? மனம் என்பது எண்ணங்களின் தொடரோட்டமும் அந்தத் தொடரோட்டத்தை அறியும் இன்னொரு ஓட்டமும் ஆகும். அவற்றில் எது எதை கண்காணிக்கிறது என்பது அந்தத் தருணத்தில் நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப்பொறுத்தது மட்டுமே. நாம் மனதைக் கவனிக்க ஆரம்பித்ததுமே நாம் கவனிக்கிறோம் என்பதைக் கவனிக்க ஆரம்பிக்கிறோம். ஆம், மனம் இயங்கியபடியே இருக்கும் நிலையில் சாதாரணமாக நம்மால் அதை அறிய முடியாது. அப்படி அறிய முயன்றோமெனில் அம்முயற்சி இன்னொரு மன ஓட்டமாக மாறி ஏற்கனவே ஓடியபடி  இருக்கும் மற்ற மன ஓட்டங்களுடன் கலந்து விடும். பெரும்பாலானவர்கள் தியானம் செய்யும்போது ”இதோ நான் தியானம் செய்கிறேன்.ஆம் நான் தியானம் செய்கிறேன் . அடாடா நான் தியானமல்லவா செய்கிறேன் . சரி இனி தியானம் செய்யலாம். சரி மீண்டும் முயன்று பார்ப்போம் ”  என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும். இங்கே உள்ள சித்தவிருத்தி என்ற சொல் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. ‘உளச்செயல்’ என்று உள்ளத்தை வரையறுக்கிறது பதஞ்சலி சூத்ரம். அதாவது மனதை ஒரு அமைப்பாக அல்லது பொருளாக அது காணவில்லை. ஒரு நிகழ்வாகவே காண்கிறது. தீபோல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. மனமெனும் ஓயா நிகழ்வே மனம். மனமெனும் நிகழ்வை மனம் அறிவதே மனம்.
                                                       அந்த அறியும் மனம் எது? அதுவும் நிகழ்வா? அந்நிகழ்வில் மாறாதுள்ள விதி என ஏதும் உள்ளதா? நட்சத்திர மண்டலங்களை எதிர்திசைக்கு கொண்டு செல்ல வைப்பதுபோல பிரிந்து சிதறி செல்லும் நம் மனதையும் நேர் எதிர்த் திசைக்குச் செல்லவைத்தால் அவை சென்று சேரும் அந்த துவக்கப்புள்ளி எதுவாக இருக்கும்? யோசித்திருக்கிறோமா? காமம் குரோதம் மோகம் அகங்காரம் என்று விரியும் இந்த ஓயாத மனநாடகத்தின் விதைகள் எங்கே உள்ளன? ஆன்மீக தாகம் ,அறிவுத்தாகம், விடுதலைத்தாகம், சுயத்துக்கான தவிப்பு என்றெல்லாம் நாம் அடையாளம் கொடுக்கும் இச்சா சக்தியின் ஊற்றுக்கண்கள் எங்குள்ளன?  யோகம் என்றால் மனதைக் கையாள்வதற்கான ஒரு பயிற்சி . கையாளும் விஷயத்தை முதலில் அறிந்தாக வேண்டும். அதற்கு மனதை நிறுத்தி அதை கூர்ந்து கவனிக்கவேண்டும். எனவேதான் மனதை கட்டுப்படுத்துதல் , நிறுத்துதல் என ‘ நிரோத ‘ த்தை முதலிலேயே பதஞ்சலி சொல்கிறார். இது நம் மூலநூல்களில் பலவற்றின்  முக்கியமான இயல்பாகும். எது அந்நூலின் சாராம்சமான கருத்தோ அது முதலிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. உதாரணமாக ஈசாவஸ்ய உபநிடதம் முதல் வரியிலேயே அதன் மையக்கருத்தைச் சொல்லிவிடுகிறது– இவற்றிலெல்லாமே இறை குடிகொள்கிறது .
                                                      பதஞ்சலி யோக சூத்திரம் முன்வைக்கும் யோக தரிசனத்தை நாம் சாங்கியதரிசனத்தின் துணைத்தரிசனமாகவே கற்கவேண்டும். இந்து ஞானமரபின் அனைத்து குருகுல அமைப்புகளிலும் கபில முனிவரின் சாங்கிய காரிகையும் பதஞ்சலி யோக சூத்திரங்களும் சேர்த்தே கற்பிக்கப்பட்டன. சொல்லப்போனால் ஆறுதரிசனங்களையும் ஒன்றாகவே கற்பது சிறந்தது. நாராயண குருவின் உவமையை இங்கே நினைவுகூரலாம். ஐந்து தரிசனங்களும் ஐந்து விரல்களைப் போன்றவை. அவை ஒன்றுசேர்ந்து செயல்பட்டாக வேண்டும். அந்த ஐந்துவிரல்களில் வேதாந்தம் சுட்டு விரல் என்றும் யோகம் கட்டைவிரல் என்றும் சொல்லப் படுவதுண்டு.அதாவது பிற  அனைத்துத் தரிசனங்களுடனும் இணைந்து செயல்படும் தன்மை யோகத்துக்கு உண்டு. யோகம் ஒரு தரிசனத்துடன் இணையும்போது அது செயல்வடிவம்கொள்கிறது. ஆனால் கடந்த ஐம்பதாண்டுகளாக யோகம் உலகளாவ பெற்ற கவனம் காரணமாக யோகசூத்திரம் மைய இடத்துக்கு வந்துவிட்டிருக்கிறது.
                                                   பல குருகுலங்களில் பதஞ்சலி யோகசூத்திரம் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பதஞ்சலி யோகசூத்திரம் பிற தரிசனங்களின் துணை இல்லாமலேயே நிற்கக் கூடிய ஒரு சுதந்திரமான பிரதி என்ற கௌரவம் அதற்கு கைவந்திருக்கிறது. ஆகவே இன்று அதை சாங்கியதரிசனத்தின் ஒரு பகுதியாக கருதவேண்டியதில்லை. எங்காவது சூத்திரங்கள் புரியாமல் ஆகுமென்றால் மட்டும் சாங்கிய தரிசனக் கருத்துக்களை தொட்டுக்கொண்டால்போதும். இத்தகைய மாறுதல் மரபுக்கு உகந்ததா என்ற கேள்வி எழலாம். இதன் மூலம் நாம் எதையாவது இழக்கிறோமா என்பது இன்னும் பொருத்தமான கேள்வி. காலமாறுதல்கள் பல விஷயங்களை தவிர்க்க முடியாதவையாக ஆக்குகின்றன என்பதே அதற்குப் பதில். நாம் இன்று கல்வி கற்கும் முறையும்சரி, சிந்திக்கும் முறையும் சரி, விவாதிக்கும் முறையும் சரி, நம் மரபு சார்ந்தவை அல்ல. நம்முடைய மரபான அறிவியங்கியல் இப்போது ஒரு பழைய விஷயமாக ஆகிவிட்டிருக்கிறது.பண்டைக்காலத்தில் கருத்துக்களை நியாய சாஸ்திர அடிப்படையில் விவாதித்தார்கள். உண்மையை புறவயமாக வகுத்துக்கொள்வதற்கும் விவாதிப்பதற்குமான தர்க்க அடிபப்டைகளை வகுத்துச் சொல்லும் சிந்தனைமுறையே நியாயம். ஆறுதரிசனங்களில் ஒன்றாகவும், வைசேஷிக தரிசனத்தின் கிளையாகவும் விளங்கிய நியாயம் பின்னர் தனித்த வளர்ச்சியை அடைந்தது. அது வைசேஷிகத்தில் இருந்து முழுமையாகவே பிரிக்கப்பட்டது. நியாயம் ஒரு பிரபஞ்ச தரிசனம் என்ற  நிலையில் இருந்து எல்லா பிரபஞ்சதரிசனங்களையும் வகுத்துக்கொண்டு விவாதிப்பதற்கான அடிப்படைத் தர்க்கக் கட்டுமானமாக ஆகியது. இந்த வளர்ச்சிக்கு பௌத்தம் ஆற்றிய பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகும்.
                                                 பௌத்த ஆசிரியர்களில் அஸங்கர், வசுபந்து, நாகார்ஜ்ஜுனர், திக்நாகர், தர்மகீர்த்தி போன்று பெரும்பாலானவர்கள் நியாயத்துக்கு தங்கள் உரை ஒன்றை வழங்கியிருக்கிறார்கள். இந்த உரைகள் வழியாக நியாயம் மீண்டும் மீண்டும் பிறவி கொண்டு வளர்ந்தது. சென்ற நூற்றாண்டுவரைக்கும் நியாயமே நம்முடைய விவாத அரங்குகளை தீர்மானித்தது. நியாயம் கற்பதென்பது அறிவுச்செயல்பாட்டின் அடிப்படையாகக் கருதப்பட்டது. இன்றும்கூட நாம் பழைமையான குருகுலங்களில் மரபான தத்துவக் கல்வி கற்றவர்களிடம் நம்முடைய அறிதல்களைப் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. அவர்களின் கல்வி நியாய அடிப்படையில் அமைந்ததாக இருக்கிறது 1988 ல் விஷ்ணுபுரம் எழுதுவதற்காக பாலக்காட்டில் ஒரு மீமாம்சை அறிஞரைப் பார்க்கச்சென்றேன். அவருக்கு நான் சொன்னது புரியவில்லை. மீமாம்சை குறித்து மேலைநாட்டு அறிஞர்களின் எந்தக் கருத்தும் புரியவில்லை.  காரணம் முற்றிலும் வேறான ஒரு அறிவியங்கியல் சார்ந்து நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவியபோது மேலைநாட்டு அறிவியங்கியல் நம்மிடையே செல்வாக்கு பெற்றது. ஐரோப்பிய சிந்தனைகள் அனைத்துமே கிரேக்க தர்க்கவியலை அடிபடையாகக் கொண்டவை.  ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவிய ஆரம்ப நாட்களில் தர்க்கவியல் மிக முக்கியமான ஒரு கல்வியாக இருந்தது. தர்க்கவியலின் ஒரு பகுதியாகவே மேலைத்தத்துவம் கற்பிக்கப்பட்டது. தர்க்கவியலில் பட்டப்படிப்பும் பட்டமேற்படிப்பும் படிப்பதும் ஆதாரமான கல்வியாகக் கருதப்பட்டன. காரணம் அன்றைய பிரிட்டிஷ் அரசால் முன்னிறுத்தப்பட்ட சட்டம், அறிவியல் என்ற இரு துறைகளும் கிரேக்க தர்க்கவியலில் வேரூன்றியவை. அவையே நம் இன்றைய நவீன வாழ்க்கையை உருவாக்கின. ஆகவே மெல்லமெல்ல நியாயத்தின் அறிவியங்கியல் காலாவதியானது.
                                                 அக்காலத்தில் இந்தியவியல் [இண்டாலஜி] உருவாகியது. இந்திய மூலநூல்கள் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழியாக்கம்செய்யப்பட்டன. ‘இந்திய ஞானத்தை கிரேக்க தர்க்கவியல் சார்ந்து புரிந்துகொள்ளும் பெருமுயற்சி ‘ என்று நாம் இந்தியவியலை வகுத்துக் கொள்ளலாம். இந்தியவியல் வழியாகவே நாம் அனைவரும் இந்திய ஞானமரபை புரிந்துகொண்டிருக்கிறோம். இது ஒருவரலாற்று விபத்து. பலநூற்றாண்டுக்கால இடைவெளியால் நம் மரபான கல்வியமைப்புகள் அழிந்தன. நம்முடைய பொதுக்கல்வியும் மரபான முறையை அறவே மறந்து மேலைக்கல்விமுறையை சார்ந்ததாக ஆகியது. எனவே வேறு வழியில்லை விவேகானந்தருக்கும் ராமகிருஷ்ணபரமஹம்ஸருக்கும் இடையேயான உரையாடலில் இந்த முரண்பாடு மீண்டும் மீண்டும் மேலெழுந்து வந்ததை விவேகானந்தர் பலவாறாகப் பதிவுசெய்திருக்கிறார். குறிப்பாக உருவ வழிபாடு சார்ந்து அவருக்கும் ராமகிருஷ்ணருக்கும் நிகழ்ந்த உரையாடலையும், பின்னர் விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப்புரிந்து கொண்டதையும் உதாரணமாகச் சொல்லலாம். ராமகிருஷ்ணர் வேதாந்தி.  ‘பிரம்மமே நான்’ என உணர்ந்து சமாதியோகத்தில் அமர்பவர். ஆனால் கிருஷ்ணபக்தியிலும் காளிபக்தியிலும் ஆடிப்பாடி நெகிழ்ந்து கண்ணீர் விட்டு திளைக்கவும் செய்தார். அதை ஏற்க விவேகானந்தரால் முடியவில்லை. ஒன்று இன்னொன்றை மறுப்பது என்று அவர் புரிந்துகொண்டார். நீண்ட ஒரு ஆன்மீகப் பரிணாமத்திற்குப் பின்னரே அதிதூய ஆன்மீக அனுபவமும் உருவவழிபாடு சார்ந்த பக்தியும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்று உணர்ந்தார். இதே முரண்பாட்டை நாராயணகுருவுக்கு நடராஜகுருவுக்கும் இடையேயான உரையாடல்களிலும் நாம் காணமுடியும்.
                                                   விவேகானந்தர் பிற்பாடு ஆற்றிய பெரும்பணி என்பது இந்தியவியல் உருவாக்கி அளித்த மேலைத்தர்க்கரீதியான இந்தியசிந்தனைக் கட்டுமானத்த்தில் உள்ள இடைவெளிகளை கீழைத்தர்க்கத்தின் அறிதல்கள் மூலம் நிரப்புவதைத்தான். அதையே நடராஜ குருவும் செய்தார் என்று சொல்லலாம். நியாயத்தைப்போலவே யோகமும் அதன் மூலத்தரிசனமாகிய சாங்கியத்தில் இருந்து பிரிந்து தனியான வளர்ச்சியை அடைந்தது. அதை நிகழ்த்தியவர்களும் பௌத்தர்களே. பௌத்த யோகாசார மரபுக்குப் பின்னர் யோகம் என்பதே முற்றிலும் இன்னொன்றாக ஆகிவிட்டது. பின்னர் அந்த யோகமரபையே அத்வைதம் போன்ற பிற்காலத்தைய வேதாந்த மரபுகள் எடுத்தாண்டன. இன்று நாம் காணும் யோகம் என்பது உண்மையில் இவ்வாறு பல படிகளிலாக பரிணாமம் கொண்டு வளர்ந்துவந்த ஒன்று. அந்த ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மூலநூலாக நின்றுகொண்டிருக்கிறது பதஞ்சலி யோக சூத்திரம். இந்திய மரபில் ஒரு சிறப்பியல்பு உண்டு என்பதை நாம் காணலாம். பெரும்பாலும் மூலநூல்களை மறுவாசிப்பும் மறுவிளக்கமும் கொடுப்பதன் மூலமே சிந்தனை பரிணாமம் கொள்கிறது. பதஞ்சலி யோக சூத்திரமும் அவ்வாறு வளர்ந்ததுதான். இந்த உரை வரை. ஆக, இந்த நூற்றாண்டில் நாம் பதஞ்சலி யோக சூத்திரத்தை அணுகும்போது அணுகும் அறிவுச்சூழலும் மாறிவிட்டிருக்கிறது. அந்நூலைப் பொருள்கொள்ளும் முறையும் மாறியிருக்கிறது. மேலைத்தருக்கப்பின்னணியில் பௌத்தம் வழியாக வளர்ந்து வந்த யோகத்தை நாம் இன்று வாசிக்கிறோம். ஆகவே அதை ஆறுதரிசனங்களில் ஒன்றாக வாசிக்க ஆரம்பிப்போம் என்றால் அது அதைச் சுருக்குவதாகவே அமையும். இன்றைய உலகளாவிய சிந்தனைச் சூழலில் யோகத்தை நாம் எப்படி வாசிப்பது? வழக்கமாக செய்யப்படும் இரு வகை வாசிப்புகள் உண்டு. ஒன்று மத ரீதியான வாசிப்பு.
                                                   பண்டைய ரிஷிகள் கண்டடைந்த மெய்ஞானத்தின் இறுதி வடிவம் அது என்று எடுத்துக்கொண்டு அதை வழிகாட்டிக் கட்டளைகளாக மட்டும் காண்பது. இரண்டு, பண்டைய சிந்தனைகளை தெரிந்துகொள்ளும் வரலாற்று ரீதியான ஆர்வம். இரண்டுக்கும் அவற்றுக்கான பங்களிப்பு உண்டு. அவற்றுக்கும் அப்பால் ஒரு வாசிப்புச் சாத்தியமும் உண்டு என்பதைச் சுட்ட விரும்புகிறேன். கிரேக்க தத்துவ நூல்கள் கிரேக்க மதம் மற்றும் கிரேக்கப் பண்பாட்டின் விளைவுகள். ஆனால் மேலைத்தத்துவம் அவற்றை தத்துவமூலநூல்களாகக் கண்டு காலந்தோறும் வளர்ந்து வரும் தத்துவசிந்தனைகளுடன் தொடர்பு படுத்தி விவாதித்துக்கொண்டே இருக்கிறது. அத்தகைய ஒரு வாசிப்பு பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற நூல்களின் அடிப்படை மெய்யறிதல்களை மானுடப்பொதுவாக ஆக்கவும், மானுடசிந்தனையின் அனைத்து தளங்களுடனும் இணைத்து விரிவாகப்புரிந்துகொள்ளவும் உதவக்கூடியதாகும். அதுவே இன்றைய அடிப்படைத்தேவை என்பது என் எண்ணம். இவ்வாறான நவீன வாசிப்பில் நாம் தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டிய நவீனச் சிந்தனைகள் மூன்று தளங்களைச் சார்ந்தவை. ஒன்று தத்துவம். மேலைத்தத்துவ சிந்தனை என்பது தொடர்ச்சியான வளர்ச்சிப்போக்கு கொண்ட ஒன்று. அத்தகைய ஒரு சீரான வளர்ச்சி இந்திய சிந்தனையில் இல்லை என்பது உண்மை. அதற்கு பல காரணங்கள் உண்டு என்றாலும் முக்கியமான காரணம் இந்தியாவில் இன்று இந்திய சிந்தனை கற்பிக்கப்படுவதில்லை என்பதே. நாம் எட்டாம் வகுப்பு படிப்பதற்குள் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் வரை அறிமுகம் செய்துகொண்டு விடுகிறோம். இந்திய தத்துவத்தை சிறப்புப்பாடமாக எடுத்து பட்டமேற்படிப்பு படித்தாலொழிய கபிலரை நாம் அறிமுகம்செய்துகொள்ள முடியாது. அத்துடன் நம் கல்விமுறையின் அடித்தளமாக இருப்பது மேலைநாட்டு அறிவியலும் தத்துவமும்தான். ஆகவே நம்முடைய சிந்தனைமுறையின் அடியில் இந்திய தத்துவமரபின் அம்சமே இல்லை. இதனால் நம்மால் இந்திய தத்துவ மரபை ஒரு தொல்பொருள் என்ற அளவில் தகவல்களாக மட்டுமே அணுக முடிகிறது. அதை நம் சிந்தனைகளுக்கான கருவியாகக்கொள்ள முடிவதில்லை.
                                                      ஆகவே நம் தத்துவ மரபு நவீனகாலகட்டத்தின் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்படியாக வளர்க்கப்படவில்லை. சிற்சில விதிவிலக்கான தனிச்சிந்தனையாளர்கள் மட்டுமே கண்ணுக்குப் படுகிறார்கள். அது போதாது. ஒரு தத்துவமரபு ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தின் பொதுச்சிந்தனையின் உள்ளே செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது மட்டுமே அதில் உண்மையான வளர்ச்சி நிகழமுடியும். கிரேக்க தத்துவ மரபு ஐரோப்பிய சிந்தனையின் அடித்தளமாக எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறது. இன்றைய நவீன சிந்தனையாளன்கூட கிரேக்க மரபில் இருந்துதான் தன் கருதுகோள் உருவாக்கத்தை தொடங்குகிறான், ஏற்றோ மறுத்தோ. ஆகவே மேலைத்தத்துவத்தில் உண்மையான வளர்ச்சி உள்ளது. மேலும் இந்தியசிந்தனை சார்ந்த எதுவுமே உதவாத பழங்குப்பை என்று சொல்ல நாம் ஒரு நூற்றாண்டாக பழக்கப்பட்டிருக்கிறோம். மெக்காலேயின் புகழ்பெற்ற மேற்கோளில் அவர் ஒட்டுமொத்த இந்திய சிந்தனை அனைத்த்தையும் சேர்த்தால்கூட பத்தாண்டுகால பிரிட்டிஷ் இலக்கியம் மற்றும் தத்துவசிந்தனையின் அளவுக்கு நிகராகாது என்று சொல்கிறார். மெக்காலேயில் தொடங்கும் நம் கல்வித்துறை தலைமுறை தலைமுறையாக நம்மிடம் அந்த எண்ணத்தை உருவாக்குகிறது. அதை ஒரு மானசீகமான அடிமைத்தனம் எனலாம். ஆனால் நம்முடைய பேரறிஞர்கள் இலக்கியவாதிகள் என பலர் அந்த எண்ணத்தை மீற முடியாதவர்கள்.அதேசமயம் மூவாயிரமாண்டு பழமையுள்ள சாக்ரடீஸ்,பிளேட்டோ, அரிஸ்டாடில் சிந்தனைகள் மானுட சிந்தனையின் அடித்தளங்கள் என்று அவர் சொல்வார், அவை அவருக்கு பழங்குப்பைகள் அல்ல. இந்திய சிந்தனைகளை மத சிந்தனைகள் என அவர் சொன்னபோது சாக்ரடீஸம் கிரேக்க மதத்துக்குள் நின்றவரல்லவா, அவரும் ஆத்மா போன்ற உருவகங்கள் வழியாக சிந்தித்தவர் அல்லவா என்று நான் கேட்டேன்.
                                                           அப்போதுதான் அச்சிந்தனைகளிலும் அவருக்கு பெரிதாக அறிமுகம் இல்லை என்று உணர்ந்தேன். ஆனால் இந்த மனப்பிம்பம் அவரில் ஆழ வேரூன்றியிருந்தது. இது சராசரியான ஒரு இந்தியமனத்தின் அமைப்பு. நம்மைச்சூழ்ந்துள்ள பெரும்பாலானவர்கள் இந்தத் தளத்திலேயே இருக்கிறார்கள் என்பதைக் காணலாம். ஆகவே மேலைத்தத்துவத்தின் அடிப்படைகளுடனும் இன்றைய பரிணாமத்துடனும் பதஞ்சலி யோகசூத்திரத்தை நாம் ஒப்பிட்டு வாசிக்கும்போது ஏராளமான புதிய சாத்தியங்களைக் கண்டடைய முடியும். அதற்கு பதஞ்சலி யோகசூத்திரத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நாம் தத்துவப்படுத்திக்கொள்ள வேண்டும்.மேலைத்தத்துவம் உருவாக்கியிருக்கும் கோட்பாடுகளுடன் அவற்றை இணைத்து யோசிக்க அது நமக்கு உதவும் இரண்டாவதாக, மேலை உளவியல். பதஞ்சலி யோக சூத்திரத்துடன் ஒப்புநோக்கையில் மேலை உளவியல் குழந்தைப்பருவத்திலேயே இருக்கிறது என்பதே என் எண்ணம். அதை முக்கியமான சில உளவியலாளர்களுடனான உரையாடலிலும் நான் கேட்டதுண்டு. மேலும், மேலை உளவியலின் பல ஆதாரக் கோட்பாடுகள் பதஞ்சலி யோகம் போன்ற கீழை யோகவியலில் இருந்து கடன்பெற்றவை. ஆனால் மேலை உளவியல் நவீன அறிவியலுக்குரிய தர்க்கத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது கிரேக்க தர்க்கவியலில் இருந்து பிறந்து இன்று எல்லா சிந்தனைகளுக்கும் அடிபப்டையாக இருக்கும் மேலை அறிவியங்கியலில் அது அமைந்திருக்கிறது. நாம் கல்விக்கூடங்களில் கற்பதும் சிந்திப்பதும் அதில்தான். ஆகவே பதஞ்சலி யோகம் போன்ற பண்டையச் சிந்தனைகளை நாம் மேலை உளவியலுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது அவற்றை புரிந்துகொள்வதும் விவாதிப்பதும் எளிதாகிறது. பதஞ்சலி யோகத்தை உளவியலும் உளம் கடந்த இருப்பு குறித்த ஆய்வும் என்று பொதுவாக வகுத்துக்கூறலாம். அதன் அடிப்படைகள் பல மேலை உளவியலை வைத்துப்பார்த்தால் புரிந்துகொள்ள எளிதானவை.
                                                         அதே சமயம் பதஞ்சலி சொல்வதை ‘நிரூபிக்க’ மேலை உளவியலை துணைகொள்வது போன்ற அபத்தமும் வேறில்லை. பட்டப்படிப்புப் பாடத்தை பத்தாம் வகுப்புப் பாடத்தை வைத்து நிரூபிக்க முயல்வது போன்றது அது மூன்றாவதாக, மொழியியல். பதஞ்சலி அடிப்படையில் மனித இருப்பு அல்லது தன்னிலை குறித்த தரிசனத்தை முன்வைக்கிறார் எனலாம். சமகாலச் சிந்தனையில் இந்த கருதுகோள்கள் குறித்த விரிவான ஆய்வுகள் மொழியியலில்தான் நிகழ்ந்துள்ளன. ஆகவே மொழியியலின் கோட்பாடுகளை பதஞ்சலியை புரிந்துகொள்ள பயன்படுத்தலாம். அத்தகைய ஒரு நவீன வாசிப்புக்கு இன்றியமையாத தேவை பதஞ்சலி யோகசூத்திரத்தை நவீன மனநிலையுடன் அணுகுவதாகும். நவீன மனநிலை என்றால் நான் இப்படி வகுத்துக் கொள்கிறேன்.
1. ஒரு ஞானத்தை ஒரு இனம், மொழி, மதம், பண்பாட்டுக்குள் நிறுத்திவிடாமல் மானுடப்பொதுவான ஞானமாக அதை எடுத்துக்கொண்டு ஆராய்வது.
2. ஒரு ஞானத்தை ஒரு குறிப்பிட்ட காலத்தின் வெளிப்பாடாகக் கருதாமல் எப்போதைக்குமான ஞானமாக எடுத்துக்கொண்டு ஆராய்வது
3. அதன் மீது பக்தியோ வெறுப்போ இல்லாத தர்க்கபூர்வ  அணுகுமுறை அத்தகைய ஒரு வாசிப்பு பதஞ்சலியை நமக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரக்கூடும் இத்தகைய ஓர் ஆய்வுக்கு முன் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. தாந்திரீக மரபு உருவாக்கியிருக்கும் தியான, உபாசனை முறைகளுக்கும் பதஞ்சலிக்கும் நேரடித் தொடர்பு இல்லை. அவை வேறு வேறு. பல ஆசிரியர்களின் யோக முறைகளில் இந்த மயக்கம் நிகழ்ந்து பலவகையான புரிதல் இடர்களை உருவாக்கியிருக்கிறது. பலர் பதஞ்சலி யோகசூத்திரத்தையே தாந்திரீக பாணியில் விளக்குவதையும் நான் வாசித்திருக்கிறேன். நெடுங்காலமாகவே யோகமரபும் தாந்த்ரீக மரபும் இரு தனிப்போக்குகளாக செயல்பட்டு வந்துள்ளன. இரு மரபுகளும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவை என்பதனால் அவற்றுக்கு இடையே பல பொதுக்கூறுகளும் உண்டு என்பதை மறுக்கமுடியாது.
                                                      இந்து தாந்த்ரீக மதங்களும் சரி, பௌத்தத்துக்குள் உள்ள வஜ்ராயனம் போன்ற தாந்த்ரீக பிரிவுகளும்சரி,  யோகத்தை தங்களுக்காக மறு ஆக்கம் செய்து கையாண்டன என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஆனாலும் அவை இரண்டும் வேறு வேறுதான். என்ன வேறுபாடு? அடிப்படையே வேறு வேறு என்பதுதான். யோகம்  தன் மனத்தை அவதானிப்பதில்  தொடங்குகிறது. அதை கட்டுப்படுத்தி அதன் ஆழங்களை அறியும் ஒரு தொடர்செயல்பாடு அது. மனத்தின் வெளிப்பாடுகளில் அதற்கு ஆர்வம் இல்லை. அதன் மூலத்தை நோக்கிச் செல்வதையே அது இலக்காகக் கொள்கிறது. அதற்காக பலவகையான பயிற்சிகளை அது உருவாக்கிக் கொள்கிறது. அத்தனை பயிற்சிகளுக்கும் நோக்கம் அகத்தை அறிந்து கடந்து சென்று அதன் சாரத்தில் அமர்தல் மட்டுமே. நேர் மாறாக தாந்த்ரீக மரபு என்பது மனவெளிப்பாடுகளையே முதலில் கருத்தில் கொள்கிறது. மனத்தின் வெளிப்பாடுகளை ஒவ்வொன்றாக பயின்று அறிந்து  வென்று கடந்துசெல்லுதல் அதன் வழிமுறை. அச்சம் காமம் வன்முறை போன்று மனத்தின் ஆதார வெளிப்பாடுகள் ஏராளமானவை. ஒவ்வொன்றையும் அறிவதே தாந்த்ரீகம் முன்வைக்கும் விடுதலை மார்க்கமாகும். கடந்துசெல்லுதலே விடுதலை அல்லது முக்தி என்பது அதன் அறிதல்.
                                                     மனம் வெளிப்படுவது குறியீடுகள் வழியாகவே. ஆகவே தாந்த்ரீகம் குறியீடுகளை ஏராளமாக உருவாக்கிக் கொள்கிறது. நம்முடைய புராணங்கள் சிற்பங்கள் போன்ற ஏராளமான குறியீடுகள் தாந்த்ரீகத்தால் உருவகிக்கப்பட்டவையே. அதேபோல நம் உடல், மனம் பற்றியும் தாந்த்ரீகம் ஏராளமான குறியீடுகளை உருவாக்கியிருக்கிறது. அக்குறியீடுகளை பருண்மையான உண்மைகளாக எடுத்துக்கொள்வர்கள் பலர். தாந்த்ரீகம் இரு வழிகளை கடைப்பிடிக்கிறது. அவை இடது வலது என பிரிக்கப்பட்டு வாமாசாரம் தட்சிணாச்சாரம் என்று சொல்லப்படுகின்றன. மனவெளிப்பாடுகளை அறிய அவ்வெளிபபடுகளையே மனதால் நிகழ்த்தி அதன் எல்லையை அறிவது ஒரு வழி. அதாவது காமத்தை வெல்ல காமத்தையே பழகுவது. அச்சத்தை வெல்ல அச்சமூட்டுவதற்குள்ளேயே நுழைவது. மரணத்தை அச்சமென்றால் சுடுகாட்டு பிணம் மீது அமர்ந்து தியானம்செய்வது போன்ற ஒரு உக்கிரமான வழி அது.  இதுவே இடதுமுறை. அல்லது வாமாச்சாரம். மன வெளிப்பாடுகளை வெல்ல அவ்வெளிப்பாடுகளை உன்னதமாக்கிக் கொள்ளலாமென்பது இன்னொரு வழி. காமத்தை வெல்ல அதை குறியீடாக ஆக்கி அக்குறியீட்டை கலைகளாக ஆக்கி அக்கலையின் உன்னதங்கள் வழியாக காமத்தை அறிந்து கடந்துசெல்லலாம். அச்சம் வன்முறை அருவருப்பு என அனைத்தையுமே அவ்வாறு கடந்துசெல்லலாம். உன்னதமாக்கல் என்பது இம்முறையின் முக்கியமான வழிமுறை. சடங்குகள் பூஜைமுறைகள் கலைகள் என அதற்கு பல வழிகளை அது கண்டடைந்துள்ளது. இது வலதுமுறை–தட்சிணாச்சாரம். நாம் தமிழ் சித்தர் மரபு என்று சொல்லும் மரபில் இருவகை தாந்த்ரீகர்களும் உள்ளனர். இரு மரபுகளுமே யோகத்தை தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்கின்றன. இவ்விரு மரபுகளும் பலவகையான உருவகங்களையும் குறியீடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.அக்குறியீடுகள் எளிமையான சித்தர் பாடல்கள் வழியாக சாதாரண மக்களிடம் வரும்போது அவை அப்படியே நேரடியாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு யோகம் குறித்து ஏராளமான நம்பிக்கைகள் நம்மிடையே புழங்குகின்றன.
                                            உடலில் உள்ள மூலாதாரம் முதலிய ஒன்பது சக்திமுனைகள் பற்றிய பேச்சு ஓர் உதாரணம். அவை முறையே காமம்,பசி,மூச்சு,பேச்சு,இதயம், சிந்தனை, உள்ளுணர்வு, உயிருணர்வு, பேருணர்வு என்ற நிலைகளைச் சுட்டுபவை. ஆனால் உடம்பிலேயே அவை உள்ளன, தொட்டுக்கூட பார்க்க முடியும் என்ற அளவில் அவை புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. தியானத்தில் நெற்றிப்பொட்டில் ஒளி தெரிவது போன்ற பல நம்பிக்கைகள் இவ்வாறு தாந்த்ரீக உருவகங்களை நேரடியாக எடுத்துக்கொள்வதன் விளைவுகளே. இன்னும் அடுத்தபடிக்குச் சென்று அணிமா மகிமா போன்ற அட்டமாசித்திகளும் யோகத்தால் வசமாகும் என்றும் முக்காலமும் தெரியும் என்றும் சொல்லக்கூடியவர்கள் உள்ளனர். சிலர் கல்லைக் கடித்து தின்னுதல் போன்ற ஹடயோக வித்தைகளையும் யோகத்துடன் தொடர்புறுத்துகிறார்கள். அவையெல்லாமே தாந்த்ரீக மரபின் குறியீடுகள். பதஞ்சலி யோகத்துக்கும் அவற்றுக்கும் தொடர்பில்லை என்பதை உணரலாம். அத்தகைய எளிய உருவகங்களை உதறிவிட்டுத்தான் நாம் பதஞ்சலி யோகத்தை அணுக வேண்டும். பதஞ்சலி யோகம் மாயவித்தையோ, ரகசிய வித்தையோ ஒன்றும் அல்ல. அது மிக திட்டவட்டமாக எழுதப்பட்டு புறவயமாக முன்வைக்கப்பட்ட ஒரு ஞானம். அதை குருமரபுகளில் தெளிவாகவே கற்றறிந்திருக்கிறார்கள். அதில் சில பகுதிகள் நமக்கு விளங்காதவையாக இருக்கலாம்– ஏனென்றால் அது பயிலப்பட்ட மரபுகளில் பதினேழாம் நூற்றாண்டு முதல் ஓர் அறுபடல் உள்ளது. அதில் இடைச்செருகல்களும் இருக்கலாம். ஆனாலும் அது திட்டவட்டமான ஒரு தத்துவ -நடைமுறை நூலேயாகும்.




   ஸ்ரீ பதஞ்சலி முனிவர்
 இவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய “வியாகரண சூத்திரம்” என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார். இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் “வியாகரண சூத்திரத்தை” உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர். வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது. “குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்”
என்றார் ஒரு சீடர்.
 “உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம்.
மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்” என்றார்.
“குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா?”
என்று கேட்டார் இன்னொரு சீடர்.
“பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்”
என்றார் பதஞ்சலி. பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரை விலகியது. அடுத்த கணம் ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.
                                                முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார். “குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி. படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தின் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர். பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. பதஞ்சலி முனிவர் பற்றிச் சில குறிப்புக்கள். இவரைப் பற்றிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. சிலர் இவரின் காலம் தொன்மையானது என்று சொல்கிறார்கள். சிலர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாயும் சொல்வார்கள். புராணங்களின் படி இவர் ஆதி சே்ஷனின் அவதாரம். மஹாவி்ஷ்ணு பூவுலகிற்கு அவதாரங்கள் செய்ய வந்த போது இவர் முனிவராக அவதாரம் செய்வதாய்ச் சொல்கிறார்கள். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் கைகளைக் கூப்பிய வண்ணம் விழுந்ததால் இவர் பெயர் "பதஞ்சலி" என்று ஆனதாய் ஒரு கூற்று. மேலும் சிவனின் நடனத்தைத் தன் மானசீகக் கண்களால் தன் உள்ளத்தின் உள்ளே ஆடுவதைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் தோற்றத்தாலும், அவரின் திடீர் எடை அதிகரிப்பாலும் வியந்த ஆதிசேஷன் அவரிடம் காரணம் வினவுகின்றார்.
                                                மகாவிஷ்ணுவும் ஈசனின் ஆனந்த நடனக் கோலத்தை வர்ணிக்கத் தாமும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய்ச் சொல்ல, விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் சிதம்பரம் க்ஷேத்திரத்துக்குப் போய்ப் பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிக்கும், அனுசூயைக்கும் பிறந்ததாயும், இந்தக் குழந்தையே பதஞ்சலி முனிவர் என்றும் கூற்று. இவருடைய சம காலத்தினரான புஷ்ய் மித்திரர் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆகையால் இவரின் காலம் கி.மு. என்று சொல்லுவோரும் உண்டு. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும், பதஞ்சலி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் "திருமந்திரம்" என்று சொல்வோரும் உண்டு. எல்லாமே ஊகங்கள் தான். காலத்துக்கு அப்பாற்பட்ட இம்முனிவரைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்: "பதஞ்சலி முனிவர் அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர். திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண்குழந்தையும் உண்டு இந்த ரிஷித் தம்பதியருக்கு. இந்த அருந்ததி தான் வசஷ்டரின் மனைவி. கோவையில்ல் இருந்து 100 கி.மீ. தள்ளி இருக்கும் "திருமூர்த்தி மலக்குன்றுகள்" இருக்கும் இடத்தில் இவர் பிறந்ததாயும், முன் காலத்தில் தென் இந்தியாவின் இந்தப் பகுதியைத் "தென் கைலாயம்" என்று அழைப்பதுண்டு என்றும் சொல்கிறார் திரு மூலர். இங்கே உள்ள அமணலிங்கேஸ்வரரைத் தான் அத்ரி மஹரிஷி வழிபட்டு வந்ததாயும் சொல்கிறார்.
                                             பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும்் ஒருவர்." "தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர்.
இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:
 "நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்!"
சித்தர்களில் ஒருவரான போகர்7,000 எழுதியதில் சொல்வது என்ன வென்றால்: தன்க்குச் சித்தி கிடைத்தது பற்றி வர்ணிக்கிறார். புரியாதவர்கள் கேட்கவும். முடிந்தால் விளக்குகிறேன். "அது என்னுடைய தாத்தா! மேலே ஏறிப் பார்! ஆனால் என்னைப் பிறப்பித்தவர் காலங்கி நாதர்! பதஞ்சலி, வ்யாக்ரபாதர், சிவயோகி முனி அனைவரும் சொன்னது பார், இதுவே சரியான வழி! அவர்கள் எப்படி மேலே ஏறுவது என்றும் திரும்புவது என்றும் சொல்லிக் கொடுத்தனர். அப்போது அந்த அகில உலகையும் படைத்துக் காத்து ஆளும் அந்த சர்வலோக சுந்தரி காட்சி கொடுத்துச் சொன்னாள்."அப்பா நீ தேடினாயே இது தான் அது!" என்று. குண்டலினி யோகம் படிக்கிறவர்களுக்கும், அதைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும் இது புரியும் என நினைக்கிறேன். நம் உடலில் உள்ள சூக்ஷும நாடியை இட நாடியின் உதவியோடும், பிங்கள நாடியின் உதவியோடும் மெதுவாய் மேலே எழுப்பிக் கொண்டு போய் நெற்றிப் பொட்டில் இருக்கும் சஹஸ்ராரச் சக்கரத்தில் சேர்த்தால் உள்ளொளி தெரியும். இறை தரிசனம் கிடைக்கும். இது சொல்வது சுலபம் என்றாலும் மிகுந்த பயிற்சியும் மன உறுதியும் தேவை. அதைத் தான் போகர் சொல்கிறார்.
                                            காலங்கிநாதரில் ஆரம்பித்துப் பின் ஒவ்வொருவராய் முயன்று அவர் கடைசியில் தான் தேடியதை அடைந்தார். அவர் வேண்டியது கிடத்ததும் பிறந்தது "போகர் 7,000". அதில் பதஞ்சலி பற்றியக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பா்ஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலருடைய அபிப்பிராயம். என்றாலும் ஆன்மீகவாதிகள் இதை எல்லாம் எழுதியது ஒருவரே எனச் சொல்கிறார்கள். பாம்பின் உடலும், மனித முகமும் படைத்த பதஞ்சலி தன் மாணாக்கர்களை நேரடியாகப் பார்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரின் மூச்சுக் காற்றில் கடுமையான வி்ஷம் இருப்பதால் அதன் மூலம் மாணாக்கர்கள் இறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான். ஒரு சமயம் 1,000 மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் சமயம் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தனக்கும் மாணாக்கர்களுக்கும் நடுவே உள்ள திரையை யாரும் நீக்கக் கூடாது எனவும் கட்டளை இட்டார் பதஞ்சலி முனிவர். மாணவர்களுக்கோ ஒரே ஆத்திரம்! ஏன் வேணாம்னு சொல்றார்னு. ஒருநாள் பாடம் நடக்கும்போது ஒரே ஒரு மாணவன் மட்டும் இயற்கையின் உந்துதல் தாங்காமல் ஆசிரியரிடம் தெரிவிக்காமல் வெளியே செல்ல, மற்ற மாணவர்கள் அந்தச் சமயம் திரையை விலக்கிப் பார்க்க அனைவரும் ஆசிரியரின் மூச்சுக் காற்றுப் பட்டுச் சாம்பல் ஆனார்கள். திரும்பி வந்த ஒரு மாணவனைக் காப்பாற்றி அவன் மூலம் வந்தது தான் அவ்ருடைய எழுத்துக்கள் என்றும், அதனாலும் முரண்பாடுகள் இருப்பதாயும் சொல்கிறார்கள். யோக வழியை மனித இனத்துக்குத் தந்தவர் ‘ஹிரண்யகர்பர்’. அதை சூத்திரங்களாக்கிவைத்தவர் மஹரிஷி பதஞ்சலி. அறிவுச் செய்திகளை மறை பொருட்களை உள்ளடக்கி சூத்திரங்களாக வைத்தவர்கள்: வேத உண்மைகளை பிரும்ம சூத்திரங்களாக வியாஸரும், பக்தி சூத்திரங்களை நாரதரும், யோக சூத்திரங்களை பதஞ்சலி முனிவரும் மானிடம் உய்ய செய்துவைத்தனர்.
                                         இவரை ஆதிசேஷனின் அவதாரமாக சொல்வர். நாரயணனின் படுக்கையே ஆதிசேஷன், சக்தியின் ஒரு விரல் மோதிரமாகியவர், இவ்வுலகை தன் தலையில் தாங்கிக்கொண்டிருப்பவர் எனவும் சொல்வர். 

Post a Comment

Whatsapp Button works on Mobile Device only